திருத்தணி: திருவள்ளூர்-திருப்பதி 4 வழிச்சாலைக்காக திருத்தணியில் கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம்- ஆந்திர மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக என்.எச் 205 விளங்குகிறது. சென்னையில்ருந்து திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலைக்கு நடுவில் தடுப்புச் சுவர் அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். இருவழிச் சாலையாக உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் திருவள்ளூரிலிருந்து திருப்பதிக்கு 4 வழிச்சாலை அமைக்க ரூ.985 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூரிலிருந்து திருப்பதி வரை சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், முதல் கட்டமாக திருவள்ளூரிலிருந்து திருத்தணி வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக திருத்தணி பைபாஸ் சாலையில் உள்ள வீடுகள், கடைகளை இடித்து, அதிலிருந்த கம்பி, அடித்தளத்தில் நிரப்பிய மணல் போன்றவற்றை எடுக்கும் பணியில் அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
* மணல் விற்பனை ஜோர்
திருத்தணியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கட்டிடங்கள் இடிக்கப்படுவதை சாதகமாக பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். வீட்டை இடிப்பதற்கு வீட்டின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து பொக்லைன் மூலம் வீட்டை இடித்து அதிலிருந்து கம்பி, மணலை அள்ளி அதிகளவில் வருவாய் ஈட்டி வருகின்றனர். குறிப்பாக மணலுக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில், இடிக்கப்படும் கட்டிடங்களின் அடித்தளத்தில் குறைந்தது 10 முதல் 25 யூனிட் மணல் இருப்பதால், மணல் வாகனங்களில் அதனை எடுத்துச்செல்கின்றனர். திருத்தணியில் பல்வேறு பகுதிகளில் யூனிட் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை மணல் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி நடைபெற்று வரும் மணல் விற்பனையை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருவள்ளூர்-திருப்பதி 4 வழிச்சாலைக்காக திருத்தணியில் கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.