குமரி மருத்துவ கல்லூரி அருகே உள்ள சாலையில் கான்கிரீட் சிலாப் சமன் செய்யப்படுமா?: தினமும் விபத்துக்கள் அரங்கேறும் நிலை

2 hours ago 1

நாகர்கோவில்: குமரி மருத்துவக்கல்லூரி அருகே உள்ள சாலையில் கான்கிரீட் சிலாப் சமன் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வடக்கு பக்கம் பள்ளவிளை – பெருவிளை ரோடு செல்கிறது. மாநகராட்சி 18 வது வார்டுக்கு உட்பட்ட இந்த சாலை பார்வதிபுரம் இணைப்பு சாலையாக உள்ளது. மேற்கு மாவட்ட பகுதிகளில் இருந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி வரும் அனைத்து வாகனங்களும் இந்த சாலை வழியாக தான் வருகின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது. மருத்துவக்கல்லூரி சாலையின் இருந்து, இந்த சாலைக்கு திரும்பும் பகுதியில் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான பிரதான வால்வு, இந்த சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. வால்வு அமைக்கப்பட்டுள்ள பகுதியை கான்கிரீட் சிலாப் அமைத்து மூடி உள்ளனர். ஏற்கனவே பலமுறை இந்த கான்கிரீட் சிலாப் உடைந்து விழுந்தது. இதனால் தற்போது அதிக எடையுடன் கூடிய கான்கிரீட் சிலாப் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கான்கிரீட் சிலாப், சாலை மட்டத்தில் இருந்து சுமார் அரை அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் உள்ளதால், பைக்குகளில் வருபவர்கள் தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. எதிரே வாகனங்கள் வரும் போது சாலையில் பைக்கில் செல்பவர்கள் சிலாப் மீது ஏறினால், தடுமாறி விழுந்து படுகாயம் அடைகிறார்கள். எனவே இந்த சிலாப் பகுதியை சாலை மட்டத்துக்கு ஏற்ப சமன்படுத்த வேண்டும்.

கான்கிரீட் அதிக எடை தன்மையுடன் அமைத்திருப்பது வரவேற்க கூடியது என்றாலும், விபத்து நிகழாத வகையில் சாலை மட்டத்துக்கு சமன் செய்ய வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து மிகுந்த உயரமாக இருப்பதால், இரவு நேரங்களிலும் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post குமரி மருத்துவ கல்லூரி அருகே உள்ள சாலையில் கான்கிரீட் சிலாப் சமன் செய்யப்படுமா?: தினமும் விபத்துக்கள் அரங்கேறும் நிலை appeared first on Dinakaran.

Read Entire Article