திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

2 months ago 8

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் பணியாளர்களுக்கு சேப்பாக்கம் அய்யா பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகளில், குடியிருப்பதற்கான ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 2021-22ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், “சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகை குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை ரூ.15 கோடியில் கட்டப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ.3.22 கோடி செலவிலும், பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 லட்சம் செலவிலும் கட்டப்பட்ட புதிய வணிக வளாகங்கள் கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 3ம் தேதி சேப்பாக்கம், அய்யாப் பிள்ளை தெருவில் ரூ.94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 குடியிருப்புகளை கொண்ட கட்டிடம் மற்றும் திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெருவில் ரூ.94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்கள் 9 பேருக்கு சேப்பாக்கம் அய்யா பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெரு ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகளில், குடியிருப்பதற்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் பழனி, மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, துணை ஆணையர், செயல் அலுவலர் நித்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article