திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி:  தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபருக்கு வலை  லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி பணம், நகை தப்பியது

2 hours ago 1

சென்னை, நவ.16: திருவல்லிக்கேணியில் எஸ்பிஐ வங்கியின் கதவு மற்றும் கிரில் கேட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி மதிப்புள்ள பணம், தங்க நகைகள் தப்பியது. திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் காவல் நிலையம் எதிரே எஸ்பிஐ வங்கி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்ததும் வங்கியை அதிகாரிகள் மூடிவிட்டு சென்றனர். நேற்று காலை, வழக்கம்போல் வங்கியை திறந்து அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர்.

அப்போது வங்கியின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கதவுக்கு முன்பு இருந்த கிரில் கேட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி வங்கி ஊழியர்கள் எதிரே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வங்கிக்கு சென்று கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும், வங்கியின் பாதுகாப்பு அறையில் உள்ள லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால், அதில் இருந்த பல கோடி மதிப்புள்ள பணம், நகைகள் தப்பின. இருந்தாலும் வங்கி உயர் அதிகாரிகளிடம் பணம் ஏதேனும் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறதா என்று விசாரணை நடத்தினர். அதில் எதுவும் திருடப்படவில்லை என தெரிவித்தனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில், அதுவும் காவல் நிலையம் எதிரே உள்ள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 12ம் தேதி இரவு வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள கடை ஒன்றில் மர்ம நபர் பூட்டை உடைத்து 200 ரூபாய் திருடியுள்ளார். அதற்கு மேல் அந்த கடையில் பணம் இல்லாததால் அந்த நபர் ஏமாற்றத்துடன் சென்றுவிட்டார். மறுநாள் அதே நேரம் நள்ளிரவு மீண்டும் எஸ்பிஐ வங்கியின் பின்புற கேட் மற்றும் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டது விசாரணையின் மூலம் உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே கடந்த 12ம் தேதி இரவு கடையின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து கட்டிடத்தின் உரிமையாளர் வெங்கடேஷ் என்பவர் திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் பெரிய அளவில் கொள்ளை நடக்காததால் போலீசார் அதில் கவனம் செலுத்தவில்லை என தெரியவந்தது. முதலில் பக்கத்து கட்டிடத்தில் திருடியது குறித்து எந்த போலீசாரும் ஆய்வு செய்யாததை அறிந்து மீண்டும் மறுநாள் அதே கொள்ளையன் சர்வ சாதாரணமாக வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், சத்தம் வெளியே கேட்காமல் இரும்புகள் வெட்டும் கட்டரை பயன்படுத்தி பூட்டை உடைத்ததும் தெரிந்தது. சிசிடிவியில் பதிவாகி உள்ள மர்ம நபரின் புகைப்படத்தை வைத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று தற்காலிகமாக வங்கி மூடப்பட்டுள்ளது என்று வெளியே நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது குறிப்படத்தக்கது.

The post திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி:  தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபருக்கு வலை  லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி பணம், நகை தப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article