திருவல்லிக்கேணி கண்டேனே!

5 hours ago 4

தலைநகர் சென்னை கடற்கரைக்கு அருகே நகரின் நடுவே எழிலோடு அமைந்துள்ளது, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்த சாரதி கோயில். பிருந்தாரண்யம், அல்லிக்குளம் என்று வேறு பெயர்களும் உண்டு. அல்லிமலர்கள் நிரம்பிய இந்தக் குளத்தை உடைய ஊர் என்பதால் திருஅல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. ஆலயம், ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிராகாரம் கொண்டது. மூலவர் வேங்கட கிருஷ்ணன் அருகில் ருக்மணி, பலராமன், ஸாத்யகி அநிருத்தர், பிரத்யும்னர் இவர்களோடு சேர்ந்து காட்சியளிக்கிறார்.

நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் – என்ற ஐந்து விமானங்கள் அல்லிக்கேணி எனும் கைரவினி சரஸ். இந்தப் புஷ்கரணியில் இந்திர, ஸோம, மீன, அக்னி, விஷ்ணு என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஐந்து தீர்த்தங்களும் ஆலயத்தைச் சூழ்ந்திருப்பதாக ஐதீகம். திருமலை – திருப்பதிக்கும், திருவல்லிக்கேணிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. திருமலை மீதமர்ந்து, தம்மை வழிபடுவோர் வாழ்வில் திருவெல்லாம் சேர்ப்பிக்கும் அந்த திருவேங்கடநாதன்தான் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதியாய் அருள்பாலிக்கிறார்.

திருமலை வேங்கடநாதனின் கருவறை விமானத்தின் பெயர் ஆனந்த நிலையம் என்றால், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் கருவறை விமானம் ஆனந்த விமானம் ஆகும். திருப்பதி வேங்கடேசப்பெருமாளே, பார்த்த சாரதியாய் திருவல்லிக்கேணியில் அமர்ந்ததால், பெருமாளுக்கு வேங்கட கிருஷ்ணன் என்றே பெயர்.

திருமலை – திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருவல்லிக்கேணியில் பார்த்தனுக்கு சாரதியாய் நின்ற கோலத்தில் அருள்புரிவதற்குக் காரணம் சுமதி என்ற மன்னன். திருமலை வேங்கடேசப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த அவர் பெருமாளிடம், ‘‘சுவாமி, தங்களது திவ்ய அவதாரங்களிலேயே பூரணமானதும், பொலிவும், கம்பீரமும் கொண்டதுமான கிருஷ்ணாவதாரத்தில், தாங்கள் பார்த்தனுக்கு சாரதியாய் நின்றருளிய கோலத்தைத் தரிசிக்க நான் மிகவும் விரும்புகிறேன். அருள் புரிய வேண்டும்!’’ என்று வேண்டிக் கொண்டார்.

பரம பக்தர்களின் பிரார்த்தனைகளையெல்லாம் பகல் என்றும் இரவென்றும் பாராமல் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் அந்த பரம தயாளன், அரசன் சுமதியின் கனவில் வந்து ‘‘பக்தா, நீ விரும்பியது போலவே கைரவிணி தீர்த்தக் கரையில் உள்ள பிருந்தாரண்ய க்ஷேத்திரத்தில் (திருவல்லிக்கேணி) பார்த்த சாரதியாய் எழுந்தருள்வேன்!’’ என்றுரைத்தார்.இப்படி அந்த திருவேங்கடவனே, திருவல்லிக்கேணியில் கிருஷ்ணனாகக் காட்சியளித்தமையால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமமும், உற்சவமூர்த்திக்கு பார்த்தசாரதி என்ற பெயரும் ஏற்பட்டது.

இப்படி திருமலை வேங்கடேசப் பெருமாள் மட்டும் தானா இத்தலத்தில் பார்த்த சாரதியாய் எழுந்தருளியிருக்கிறார். அவருடன் ஸ்ரீரங்கம் அரங்கநாதப் பெருமாளும், சோளிங்கபுரத்து நரசிம்மப் பெருமாளும், தம்பியர் சூழ சீதாராமனும், கஜேந்திரனின் துயர் போக்கிய காஞ்சி வரதராஜப் பெருமாளும் இந்த அல்லிக்கேணி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.இப்படி ஐந்து மூலவர்களைக் கொண்ட திருத் தலம் இது. இதைப் ‘பஞ்ச மூர்த்தியர் தலம்’ என்றும் சொல்வர். அவர்கள்;

1. மூலவர் : ருக்மணி பிராட்டியாருடன் வேங்கட கிருஷ்ணன்.

2. மூலவர்: மன்னாதன் எனும் ஸ்ரீரங்கநாதர் புஜங்க சயனத்தில் தாயார் வேதவல்லி தனிக் கோயில் நாச்சியார்.

3. மூலவர்: ஸ்ரீ சீதா லட்சுமண, பரத சத்ருக்ண, அனுமானுடன் ஸ்ரீராமபிரான் தெற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலம்.

4. மூலவர்: ஸ்ரீ வரதராஜர், தேவப் பெருமாள். கருடன் மீதமர்ந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

5. மூலவர்: தெள்ளிய சிங்கர் என்னும் நரசிம்மர். மேற்கு நோக்கி வீற்றிருக்கும் திருக்கோலம்.

வடமேற்குப் பக்கம் தனியாக ஆண்டாள் சந்நதியும் உண்டு. இப்படி ஐந்து திருத்தலங்களும் ஒரே திருத்தலத்தில் நிறைந்து காணப்படுகிறது. மூலவரான வேங்கடகிருஷ்ணர் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். வலது கையில் சங்கம். இடது கையில் கோல். தான் வளர்ந்த குல வலக்கத்திற்கேற்ப சுவாமிக்கு பெரிய மீசை உண்டு. திருவேங்கடநாதனே கண்ணனாக (பார்த்தசாரதி) சேவை சாதிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வலது புறம் ருக்மணி பிராட்டியும் இடது புறம் தம்பிசாத்யகியும், தெற்கே அண்ணன் பலராமனும், வடக்கே பிள்ளை பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் எழுந்தருளியுள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணன் குடும்ப சமேதனாய் எழுந்தருளியிருப்பது இத்தலத்தில் மட்டுமே. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் திருமலையைப் போலவே ஸ்ரீ வேங்கட கிருஷ்ணனுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இக்கோயில் ஐப்பசி திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தள சேவை சிறப்பு வாய்ந்தது. வருடத்திற்கு ஐந்து முறை ஐந்து பெருமாள்களுக்கும் கருட சேவை நடைபெறுகின்றது. இவற்றுள் சிறப்பாகப் பங்குனி உத்தரத்தன்று கண்ணாடி கருட சேவை நடைபெறுகிறது. தேரோட்டிய கண்ணன் பார்த்தசாரதியாக அருள்பாலிக்கும் இத்திருக்கோயிலில் வருடத்தில் பதினொரு முறை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இத்தகைய நடைமுறை வேறு எங்கும் இல்லை.

108-திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதி, திருக்கச்சி, திருஅயோத்தி, அகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசத்துப் பெருமாள்களும் தனித் தனியே சந்நதிகளில் அருள்புரியும் ஒரே திவ்ய தேசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில். அதனால் இங்கே திருவிழாக்கள் அடிக்கடி ஒவ்வொரு பெருமாளுக்கும் நடந்து கொண்டேயிருக்கும். மூலவரான அருள்மிகு பார்த்த சாரதிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘மகா சமபரோட்சணம்’ ஆகம முறைப்படி மரபு மாறாமல் முறையாக நடைபெற்று வருகிறது. எங்கும் சங்குச் சக்கரத்துடன் காட்சி தரும் திருமால், இங்கு மட்டும் போரில் சக்கரம் எதுவும் எடுக்காமல் சங்குடன் மட்டும் காட்சியளிப்பது அற்புதம். இத்திருத்தலத்தை இரண்டாவது திருப்பதி என்றே அழைக்கிறார்கள்.

புரட்டாசி சனிக் கிழமைகள் திருப்பதியைப் போல் விசேஷம் வாய்ந்தது. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாய் இருந்து பீஷ்மர்விட்ட அம்புகளை அர்ச்சுனனுக்காக தாம் ஏற்றதைக் காண்பிக்க, இன்றைக்கும் ஸ்ரீபார்த்தசாரதி உற்சவ மூர்த்தியின் திருமுக மண்டலத்தில் வடுக்களைக் காணலாம். ருக்மணி, பலராமர், மார்க்கண்டேயர், அர்ச்சுனன், பிருகுமுனிவர், அத்ரிமகரிஷி, சுமதி ராஜன், மதுமான் மகரிஷி, ஸப்தரோமா, தொண்டைமான், ஜாவலிமகரிஷி, அநிருத்ரன், பிரத்யும்னன், போன்றோர் வந்து வழிபட்டதாக ஐதீகம்.பேயாழ்வார், திருமழிசையாழ்வார் தலா ஒரு பாடலும், திருமங்கை ஆழ்வார் பத்துப் பாடலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். போர்க்களத்தில் பார்த்த சாரதியாக விளங்கும் கண்ணபிரான் குறித்து திருமங்கையாழ்வார் போற்றுகிறார் இப்படி;

‘‘விற்பெரு விழாவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ
செற்றவன் றன்னை, புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றானை
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே!’’

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் உட்பட்ட ஐந்து திவ்ய தேசப் பெருமாள்களுக்கும் மாதந்தோறும் திருவோணநாளில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவைகள் நடைபெறுகின்றன.துவாரகை அரசனாகத் திகழ்ந்த கண்ணபெருமான், சிற்றவைப் பணியால் முடி துறந்து, பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன்றன் தேர் முன்நின்ற பார்த்த சாரதிப் பெருமாளை பணிந்து வணங்குங்கள். அவன் நமது பற்றுகளையும் பாவங்களையும் களைந்து பரமானந்தம் அருளிடுவான். எதிரிகளை வெல்வதற்கும் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும், அதைத் தீர்ப்பதற்கும் பகவானுடைய கருணை வேண்டும். அதை பக்தியால் பெற்றுவிட முடியும். அத்தகைய பாக்கியத்தை சுலபமாகப் பெற்றுத்தரும் தலம் பார்த்தசாரதி அருளும் திருவல்லிக்கேணியே!

டி.எம்.ரத்தினவேல்

The post திருவல்லிக்கேணி கண்டேனே! appeared first on Dinakaran.

Read Entire Article