திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்கள் - உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 day ago 1

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் வெர்சுசா நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (3.4.2025) திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் வெர்சுசா நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறையில் தட்டச்சர் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை உலகளவில் மேம்படுத்த நிதிநிலையில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களும், தனி நபர்களும், பெரும் நிறுவனங்களும் பங்கேற்று பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து மேம்படுத்திட 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' (NSNOP) திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இத்திட்டத்தின் கீழ் சென்னை திருவல்லிக்கேனி லேடிவில்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெர்சுசா அறக்கட்டளையின் (Virtusa Foundation) பங்களிப்பில் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகங்கள், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

அறிவியல் ஆய்வகங்கள் கொண்ட கட்டிடம் 6,600 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆய்வகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வகத்தில் 24 இருக்கைகள் கொண்ட இரண்டு வகுப்பறைகளுடன் மொத்தம் 120 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பள்ளியின் வளாகத்தில் 4,600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மற்றொரு தனிக்கட்டிடத்தில் சமையல் அறை மற்றும் 60 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடம் ஆகியவை உள்ளன."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article