திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி

3 weeks ago 7

* கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்

* எ.வ.வே.கம்பன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். எ.வ.வே.கம்பன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றினார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள் போட்டிகள் நேற்று நடந்தது. விளையாட்டுப் போட்டியை, கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

விழாவில், கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், உடற்கல்வியில் சிறந்து விளங்குகின்ற இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒவ்வொரு வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார்.

இந்தப் போட்டிகளில் பங்கேற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஊராட்சிக்கும் 30 விளையாட்டு தொகுப்புகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி உள்ளார். விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாநில அளவிலும், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.

ஆகவே, நமது மாவட்டத்தை சார்ந்த விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள் இது போன்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவர் அவர் பேசினார். தொடர்ந்து, திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர், வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய 11 குறு மையங்களில் 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 10 வகையான போட்டிகளும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் 16 வகையான போட்டிகளும், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 16 வகையான போட்டிகளும் நடைபெற்றது. அதன்படி, ஒவ்வொரு குறு மையத்தில் இருந்தும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 1357 மாணவ, மாணவியர்கள் 2024 2025ம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் ஒவ்வொரு குறு மையத்தில் இருந்தும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 694 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், இன்று நடைபெறும் விளையாட்டு போட்டிகளிலும் 663 மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், 600 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற 14 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 3000 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற 17 மற்றும் 19 வயதுகுட்பட்டவர்களுக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்டகல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
வருவாய் மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்கள் பெறும் மாணவ, மாணவிகள் ஈரோடு மாவட்டத்தில் 6.11.2024 முதல் 11.11.2024 வரை நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் மாணவ, மாணவிகள் 6.11.2024 முதல் 9.11.2024 வரை ஜார்கண்ட் மாநிலம் ராய்கோட்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலானப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

The post திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article