திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம் பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதை தொகுப்பு

2 months ago 10

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்

திருவண்ணாமலை : திருண்ணாமலையில் பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதை தொகுப்புகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராமபிரதீபன், ஆர்டிஓ மந்தாகினி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயதொழில் கடனுதவி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 328 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, கட்டணமின்றி மனுக்கள் எழுதித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை நேரில் கலெக்டர் பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கும்படி விளக்கமாக மனுக்களை எழுதித்தர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு பால் வழங்கும் சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதோடு, முதியவர்கள், பெண்கள் ஆகியோர் வரிசையில் நிற்பதை தவிர்க்க, இருக்கை வசதிகள் ஏற்படுத்தியதை பார்வையிட்டார்.அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயிகளுக்கு 6 வகையான சிறுதானிய விதை தொகுப்புகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிலையில், ஆரணி புதுகாமூர் கே.கே.நகர் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை இடிக்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் மனு அளித்தனர். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம் பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதை தொகுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article