திருவண்ணாமலையில் 135வது பிறந்த நாள் விழா: சமூக விடுதலைக்காக பாடியவர் பாரதிதாசன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

3 days ago 4

 

திருவண்ணாமலை, மே 8: திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதிதாசன் 135வது பிறந்த நாள் விழா மற்றும் கவியரங்கம் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் பா.விஜய் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. விழாவில், தமிழ்வார விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

எழுச்சி மிக்க பாடல்களை தமிழுக்கு அளித்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் தமிழ் வார விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். மூட நம்பிக்கைகளையும், கண்மூடி பழக்கங்களையும், சாதி வேற்றுமைகளையும் சாடியவர் பாரதிதாசன். இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என கவியெழுதியவர். குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பாடியவர்.

கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், சாதி ஒழிப்பு என தமது புரட்சிகர பாடல்கள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் புட்சிக்கவிஞர். கடந்த 1989ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற கலைஞர், பாரதிதாசன் நுல்களை அரசுடமையாக்கினார். மேலும், 1991ல் புரட்சி கவிஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். இன, மொழி, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமைவாத ஒழிப்பு என திராவிட இனத்திற்கு கொள்கை பட்டயங்களை உருவாக்கி தந்த பாரதிதாசன், தமது எழுத்துக்களால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது நினை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அவரது பெயரில் தமிழ்நாடு அரசு விருது வழங்கி வருகிறது. கவிதை எழுதுவது இயற்கை கொடுத்த வரம். தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் இருக்க வேண்டும். எனவே, தமிழ் தொண்டு செய்வதுதான் நம்முடைய தாய்க்கு செய்கின்ற கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், டிஆர்ஓ ராமபிரதீபன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சுந்தர், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திவேல்மாறன், பன்னீர்செல்வம், துரைவெங்கட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவண்ணாமலையில் 135வது பிறந்த நாள் விழா: சமூக விடுதலைக்காக பாடியவர் பாரதிதாசன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article