*அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபமலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, வஉசி நகர் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள். மேலும், பலரது வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. மண் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இப்பணிகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மண் சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணியை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மண் சரிவால் 7 பேர் பலியான இடத்துக்கு சென்று, அங்கு நடந்துள்ள சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.மேலும், அந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு, சாலைகளில் சரிந்துள்ள மண் குவியல்களை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியை ஆய்வு செய்து, விரைந்து மேற்கொள்ளுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதோடு, மண்சரிவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, வீடுகள் இழந்துள்ள மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளவர்களுக்கு மாற்று இடம், வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்மீது, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதோடு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்பான தூய்மை அருணை சார்பில், 300க்கும் மேற்பட்டோர் நேற்று வஉசி நகர் பகுதியில் சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தன்னார்வலர்களுடன் இணைந்த அமைச்சர் எ.வ.வேலு சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்.
தன்னார்வலர்கள் அணியும் தூய்மை அருணையின் மஞ்சள் நிற சீருடையை அணிந்து, அமைச்சர் எ.வ.வேலு களத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டது அனைவரது பாராட்டையும் பெற்றது. மேலும், வஉசி நகர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் முற்றிலுமாக சீர் செய்யப்படும் வரை, அங்கு மாவட்ட நிர்வாகவும், மாநகராட்சியும் தனி கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, எம்பி சி.என்.அண்ணாதுரை, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தரன், ப.கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், எஸ்.பன்னீர்செல்வம், துணை மேயர் சு.ராஜாங்கம், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திருவண்ணாமலை வஉசி நகரில் மண்சரிவு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.