![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39035600-untitled-7.webp)
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று இரவு 7.59 மணியளவில் தொடங்கியது. மேலும் தைப்பூசம் என்பதாலும் நேற்று பகலில் இருந்தே திருவண்ணாமலையில் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
இரவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
ஒரே நாளில் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் தைமாத பவுர்ணமி கிரிவலம் முடித்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்துள்ளதால் அங்கு கூட்டநெரிசல் காணப்படுகிறது. ரெயிலில் முண்டியடித்து கொண்டு பக்தர்கள் இடம்பிடித்து வருகின்றனர். விழுப்புரம் - வேலூர் செல்லும் ரெயிலில் குவிந்த பக்தர்களால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.