திருவண்ணாமலை கோவிலில் பணிபுரியும் பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஊழியர் பணியிடை நீக்கம்

1 month ago 7

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு 16 பெண் ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கோவில் சாமி மற்றும் அம்மன் சன்னதி, பிரசாத கடை, அன்னதானக் கூடம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களில் ஒருவராக கோவிலில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் கோவிலில் உதவி மணியமாக பணியாற்றிய சதீஷ் என்பவர் தகாத வார்த்தைகளாலும், தரக்குறைவாகவும் அந்த பெண்ணிடம் பேசியதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து கோவிலில் உள்ள உயர் அலுவலர்களிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் சதீசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த ஆடியோவில் கோவில் ஊழியர் ஒருவரிடம் தூய்மை பணியாளராக கோவிலில் வேலைக்கு சேர ரூ.4 லட்சம் கடன் வாங்கி கொடுத்து உள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து பணம் வாங்கி வேலை சேர்த்து விட்ட நபரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

வைரலாக பரவி வரும் இந்த ஆடியோ பதிவின் அடிப்படையில் கோவில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆடியோவில் பேசிய பெண் ஊழியர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட உதவி மணியம் சதீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சதீஷ், பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகளால் பேசியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து இருவரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article