
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடக்கிறது.
10-ந் தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு 11 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.