திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

2 weeks ago 3

*நீர் மேலாண்மை குறித்த அரிய தகவல்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே சோழர்களின் கால தூம்பு கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டன.திருவண்ணாமலை தாலுகா மெய்யூர் மற்றும் கீழ்பென்னாத்தூர் தாலுகா தண்டரை ஆகிய கிராமங்களில் பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் மற்றும் பழனிசாமி, பாரதிராஜா, ஸ்ரீதர், மதன்மோகன், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கள ஆய்வு நடத்தினர்.

அப்போது, மெய்யூரில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தூம்பு கல்வெட்டும், தண்டரையில் விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இரண்டு தூம்பு கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளர் பாலமுருகன் தெரிவித்ததாவது:

ஏரியில் இருந்து பாசனத்திற்கு நீர்பங்கீடு செய்யவும், உபரி நீரை வெளியேற்றவும் தூம்புகள் பயன்படுகின்றன. தூம்புகள் அமைத்து நீர் மேலாண்மை செய்ததை சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழர்களின் பண்டையத் தொழில் நுட்பத்திற்கு இவை சான்றுகளாக உள்ளன.

திருவண்ணாமலை மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப்பகுதியில் கல்லால் ஆன தூம்பு காணப்படுகிறது. இந்த தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு எழுத்தமைதி அடிப்படையில், 12 மற்றும் 13ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது.

இக்கல்வெட்டில், இத்தோரணம் செய்வித்தான் அருங்குன்றக் கிழான் பொன்னம்பலக்கூத்தன் என்று வெட்டப்பட்டுள்ளது. தூம்புக்கு தோரணம் என்று ஒரு பெயரும் உண்டு என்பது இக்கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.

மெய்யூரில் உள்ள தூம்பை அருங்குன்றக்கிழான் ஆன பொன்னம்பலக்கூத்தன் என்பவர் செய்து அளித்துள்ளார் என்று இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும், தூம்புக்கு வேறு பெயர்களாக குமிழி, மதகு என்ற வரிசையில் தோரணமும் அமைகிறது. தண்டரை பெரிய ஏரியில் கரையை ஒட்டிய பகுதியில் 2 தூம்புகளில் உள்ள கல்வெட்டுகளும் விக்கிரம சோழனின் காலத்தை சேர்ந்ததா
கும்.

இக்கல்வெட்டில், விக்கிரம சோழனின் நான்காவது ஆட்சியாண்டில் சாங்கியம்முடையான் திருவந்தேவன் இடுவித்த தூம்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில், விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு என்று கல்வெட்டு முடிவு பெறாமல் உள்ளது.இந்த கல்வெட்டுகளின் மூலம் சோழர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மைத் தொடர்பான பணிகளை அறியமுடிகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட இடத்தில் தூம்புக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் நீர் பங்கீடு தொடர்பான தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்தன என்பதற்கு முக்கியச் சான்றாக உள்ளது. கடந்த 800 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இக்கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் அவர் தெரிவித்தார்.

The post திருவண்ணாமலை அருகே 800 ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால தூம்பு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article