திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா கோலாகலம்: சூரியபகவானுக்கு காட்சி கொடுத்தார்

3 hours ago 4

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன்படி, மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழா இன்று காலை துவங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலை நடை திறக்கும்போதே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டன. மாட்டுபொங்கலையொட்டி இன்று காலை மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நந்திக்கு அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார் சமேத பிரியாவிடை காட்சியளித்தார். இதன்பின்னர், ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்தார்.

பின்னர் சுவாமி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிளவில், தெற்கு மாட வீதியான திருவூடல் வீதியில் திருவூடல் விழா நடைபெறுகிறது. அப்போது அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கு ஏற்படும் ஊடலை விவரிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் எதிரெதிர் திசையில் சந்தித்து ஊடல் கொள்ளும் வகையில் உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் எடுத்து செல்வார்கள்.

ஊடல் கொண்ட உண்ணாமுலையம்மன் மட்டும் கோயிலுக்கு சென்று 2ம் பிரகாரத்தில் உள்ள தனது சன்னதிக்கு செல்வார். தொடர்ந்து, அண்ணாமலையார் குமரக்கோயிலுக்கு செல்வார். நாளை அதிகாலை அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் செல்வார். மலையே மகேசனாக விளங்கும் திருவண்ணாமலையை அண்ணாமலையாரே கிரிவலம் செல்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் சுவாமியுடன் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். நாளை மாலை ஊடல் திருவிழாவின் நிறைவாக மறுவூடல் திருவிழா நடைபெறும்.

அப்போது கிரிவலம் முடித்த அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று 2ம் பிரகாரத்தில் சன்னதியின் கதவை தாழிட்டு உள்ளே இருக்கும் உண்ணாமுலையம்மனை சமாதானம் செய்வார். அப்போது உண்ணாமுலையம்மனின் ஊடல் தணிந்ததை விளக்கும் வகையில் சன்னதியின் கதவு திறக்கப்படும். அதைதொடர்ந்து அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெறும். சிவாலயங்களில் ஊடல் திருவிழா நடைபெறுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டும்தான் என்பது சிறப்பு வாய்ந்தது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருவூடல் திருவிழா கோலாகலம்: சூரியபகவானுக்கு காட்சி கொடுத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article