திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு: தோஷ நிவர்த்தி பரிகார பூஜை

4 hours ago 2

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவை முன்னிட்டு தோஷ நிவர்த்தி பரிகார பூஜை இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை துவங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்ப நாட்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. ஆனாலும், கடந்த ஒரு வாரமாக கோடை மழை கை கொடுத்ததால், வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இதனால் பொதுமக்கள் அக்னி வெயிலில் இருந்து ஓரளவு தப்பித்து நிம்மதியடைந்தனர்.

கடந்த 4ம்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் (28ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, கடந்த 4ம்தேதியில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடந்து வருகிறது. அதையொட்டி, சுவாமி சன்னதியில் தாராபாத்திரம் பொருத்தப்பட்டு வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீரால் இறைவனின் திருமேனி குளிர்விக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் அக்னி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை முதல் காலம் 1008 கலச பூஜை, ஹோமம் மற்றும் அக்னி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை நடைபெறும்.

2வது நாளான நாளை காலை 2ம் கால 1008 கலச பூஜையும், மாலை 6 மணிக்கு 3ம் கால 1008 கலச பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, நாளை மறுதினம் காலை அக்னி தோஷம் நிவர்த்தி பரிகார பூஜை மற்றும் நான்காம் கால பூஜை மற்றும் 1008 கலச பூஜை நடைபெறும். அதைத்தொடர்ந்து, அன்று இரவு சுவாமி வீதி உலா நடைபெறும். முன்னதாக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இலவச தரிசனம் ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசனம் அம்மணியம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசை மாடவீதிவரை நீண்டிருந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்னி நட்சத்திரம் நிறைவு: தோஷ நிவர்த்தி பரிகார பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article