திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் விசிக புகார்

2 months ago 11

திருச்சி: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேட்டியளித்து வரும் திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என விசிகவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளித்தனர். திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: பாஜ கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவனை ஆபாசமாகவும், அருவருக்கதக்க வார்த்தைகளிலும் சமூக வலைதளத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அவரது சாதி குறித்து இழிவாகவும், அவதூறாகவும் பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில், தான் சார்ந்த கட்சிக்காரர்களுடன் வந்து வெட்டுவோம், குத்துவோம் என்றும், நேருக்குநேர் மோதிக்கொள்ள தயார் என்றும் பகிரங்கமாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். திருமாவளவன் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதையறிந்து, சாதிய உள்நோக்குடன் இழிவு படுத்துகிறார். தொடர்ந்து இவ்வகையான பதிவுகளை சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவு செய்து, விசிகவை சேர்ந்தவர்களுக்கும், மாற்று கட்சியினருக்கும் இடையில் பகை உணர்வை தூண்டி கலவரத்தை தூண்டி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திருச்சி சூர்யா பேசி வருகிறார். எனவே திருச்சி சூர்யா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

The post திருமாவளவன் குறித்து அவதூறு பேச்சு திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் விசிக புகார் appeared first on Dinakaran.

Read Entire Article