4.4.2025 – பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
ஒருவனுடைய நன்மை தீமைகளை நிர்ணயிப்பது அவன் செய்த வினைகள். அந்த வினைகள் எப்படி இருக்கும் என்பதை அந்தந்த காலத்தில் நிர்ணயம் செய்து கொடுப்பது நவகிரகங்கள். இறைவனின் பிரதிநிதிகளாகச் செயல்படும் நவகிரகங்களுக்கு தனிக்கோயில் இல்லை. ஆயினும் நவ கிரகங்களின் தலைவனான சூரியனுக்கு தமிழ் நாட்டில் கோயில் உள்ளது. அதற்கு சூரியனார் கோயில் என்று பெயர். அந்த சூரியனார் கோயிலுக்கு செல்பவர்கள் சூரியனார் கோயிலுக்கு அருகே உள்ள திருமங்கலக்குடி என்ற திருத்தலத்தில் உள்ள இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்து விட்டுத்தான் சூரியனார் கோவிலுக்குச் செல்வது மரபு.
ஆலய அமைப்பு
தேவாரப் பாடல் பெற்ற தலங் களில் ஒன்று.. இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை. இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக லிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது அம்மன் தனிச் சந்நதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.
கோயிலின் வாயிற்கோபுரத்தின் இருபுறமும் விநாயகர், சண்முகர் உள்ளனர். கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் மங்களாம்பிகை சந்நதி. மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி, ஈசான மூர்த்தி, சூரியன், பைரவர், விசாலாட்சி, சந்திரன் உள்ளனர். உள்சுற்றில் மகாதேவலிங்கம், சிவலிங்கம், ருத்ரலிங்கம், சங்கரலிங்கம், நீல லோஹிதலிங்கம், ஈசான லிங்கம், விஜயலிங்கம், பீமலிங்கம், தேவ தேவலிங்கம், பவோத்பவலிங்கம், கபாலீச லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து விநாயகர், மெய்கண்டார், அரதத்தர், சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர், வள்ளிதெய்வானையுடன் சண்முகர், விநாயகர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். சோமாஸ்கந்தருக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், விஷ்ணு துர்க்கை, காவேரியம்மன் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகத்தீஸ்வரர் சந்நதி உள்ளது.
தல புராணம்
முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர், அரசனுக்குத் தெரியாமல் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். கோபமான அரசன் அமைச்சருக்கு மரண தண்டனை தந்தான். சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். அலைவாணர் தனது ஆசையாக மரணத்துக்குப் பின், உடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டான். அமைச்சரின் மனைவி, மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள். அம்மன் அருளால் திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் உயிர் பெற்று எழுந்தார்.
பிராணனைத் தந்தால் பிராண நாதேஸ்வரர்;
காலமா முனிவர் என்ற ஒரு முனிவர் இருந்தார். அவருடைய ஜாதகப்படி அவருக்கு தீராத குன்ம நோய் உண்டாக வேண்டும். அவர் தவபலத்தால் நவகிரகங்களை அழைத்து இந்த நோயை நீக்கும்படி சொன்னார். அவர்களும் வினையால் வரக்கூடிய நோயை இறை அனுமதி இன்றி நீக்கினர். நவகிரகங்கள் சுயமாக எப்படி நீக்கமுடியும் என்று பிரம்மா சாபம் கொடுத்தார். முனிவருக்கு வர வேண்டிய குன்ம நோய் நவகிரகங்களுக்கு வந்தது. அவர்கள் ஈசனை வேண்டி தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர். கிரகங்கள் வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தில் நவகிரகங்களுக்கு தனி சந்நதி இல்லை.
கோயில் சிறப்புகள்
மாங்கல்ய தோஷத்தை நீக்கி கணவனின் ஆயுளை வளரச் செய்யும் திருத்தலம். பொதுவாக திருமணத்தடை உள்ளவர்கள் இங்கே உள்ள இறைவிக்கு ஜன்ம நட்சத்திரம் அன்று புதுப் புடவை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால்
திருமணத் தடைகள் அகலும்.
கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி தொடர்ந்து 11 வாரங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கே வந்து வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதத்தை சுவாமிக்குப் படைத்து அதை பிரசாதமாக எடுத்துக்கொண்டால் நோய்கள் தீரும்.
இத்திருத்தலத்தில் மங்கள நாயகியின் திருக்கரத்தில் மாங்கல்ய சரடு சாத்தி பெண்களுக்குப் பிரசாதமாக தரப்படுகிறது ராகு-கேது முதலிய தோஷங்களும் செவ்வாய் தோஷங்களும் உள்ளவர்கள் அம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்தால் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பிறக்கும். இத்திருக்கோயிலில் அகத்தீஸ்வரர் லிங்கத்தை அமாவாசை அன்று விசேஷமாக அபிஷேகம் செய்தால் முன்னோர்கள் சாபம் தீர்ந்து விடும்.
திருவிழாக்கள்
1. அருகில் உள்ள சுக்கிரன் தலமான திருக்கஞ்சனூரில் சப்தஸ்தான விழாவில் இடம்பெறும் ஏழூர்த்தலங்களில் திருமங்கலக்குடியும் ஒன்று. மற்ற தளங்கள்: திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திரு வாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமாந்துறை.
2. இத்தலத்தின் மிகச் சிறப்பான திருவிழா பங்குனி உத்திரத் திருவிழா. 10 நாட்கள் நடைபெறும்.விழாவில் ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. திருக்கல்யாணம் இரவில்தான் நடக்கிறது. இரவு மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. பின் திருமாங்கல்ய வைபவம் நடைபெறுகிறது.இந்த வைபவம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும்.
அஷ்டமி தேய்பிறை அன்று பைரவருக்கு விசேஷ பூஜை நடைபெறும்.
பிரதோஷ நாட்களில் கூட்டம் அலை மோதும்.
இத்திருக்கோயிலில் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சி தருகின்றார் இந்த ஆலயத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் அருகருகில் இருக்கிறது. இந்த இரண்டு தீர்த்தத்தில் இருந்தும் தண்ணீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
விஷ்ணு துர்க்கை, சிவ துர்க்கை என்று இரண்டு துர்க்கைகள் உண்டு, காவிரி அன்னைக்கு ஆடி 18 ஆம் பெருக்கின் போது விசேஷ பூஜை நடக்கிறது. பஞ்ச மங்கல ஷேத்திரங்களில் ஒன்று. எல்லாமே மங்களம் தான் அம்பாளின் பெயர் மங்களாம்பிகை, விமானம் மங்கள விமானம்,தீர்த்தம் மங்கல தீர்த்தம், விநாயகர் மங்கள விநாயகர்.
எப்படி செல்வது?
கும்பகோணம் – கதிராமங்கலம் – மயிலாடுதுறை சாலையில் திருமங்கலக்குடி உள்ளதால் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம். ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6:30 மணி முதல் பகல் 11:30 வரை மாலை 4:00 மணி முதல் 8:30 மணி வரை.
The post திருமாங்கல்ய பலம் தரும் திருமங்கலக்குடி appeared first on Dinakaran.