திருமழிசையில் கோலாகலம்; ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்: வரும் 7ம் தேதி தேரோட்டம்

1 day ago 2

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று மாலை சிறிய மங்களகிரி வாகனத்திலும் நாளை காலை சூரிய விருத்தமும் மாலை சந்திர விருத்தமும், 3ம் தேதி காலை மங்களகிரியும் மாலை சிம்ம வாகனத்திலும், 4 ம் தேதி காலை சிவிகையும் மாலை நாக வாகனத்திலும் 5ம் தேதி காலை ஸ்ரீஅதிகார நந்தி சேவையும் மாலை ரிஷப வாகன சேவையும் 6ம் தேதி காலை தொட்டி உற்சவமும் மாலை யானை வாகனத்திலும், 7 ம் தேதி காலை தேரோட்டமும், மாலை வசந்தமண்டபத்தில் எழுந்தருளுதலும், இரவு திருக்கோவிலுக்கு எழுந்தருளுதலும் நடைபெற உள்ளது.

வரும் 8ம் தேதி மாலை ஊணாங்கொடி சேவையும் இரவு குதிரை வாகனத்திலும் 9ம் தேதி காலை சிவிகை உற்சவமும் மாலை ஸ்ரீபிக்ஷாடனார் சவுடல் விமான உற்சவமும் 10ம் தேதி காலை ஸ்ரீநடராஜர் தரிசனமும் பகல் தீர்த்தம் தொட்டி உற்சவமும் மாலை திருக்கல்யாணமும் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவமும் இரவு அவரோகணப் பல்லக்கு சேவையும், ஸ்ரீ சண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது. 11 ம் தேதி இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீபஞ்சமூர்த்தி எழுந்தருளுதலும் 12ம் தேதி காலை ஸ்ரீஉமா மகேஸ்வரர் தரிசனமும் இரவு தெப்ப உற்சவமும் ஸ்ரீசந்திரசேகரர் எழுந்தருளுதலும் நடைபெற உள்ளது. கடைசி நாளான ஏப்ரல் 13ம்தேதி இரவு தெப்ப உற்சவமும் மற்றும் ஸ்ரீசுப்பிரமணியர் எழுந்தருளுதலும் இரவு ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் ஆஸ்தானப்பிரவேசமும் நடைபெற உள்ளது.

உத்திர திருவிழா மற்றும் விடையாற்றி விழா நாட்களில் தினமும் கோயில் வளாகத்தில் ஸ்ரீ மனோனுகூலேஸ்வரர் பக்தஜன சபையினரால் திருமுறைப்பாராயணமும் திருமழிசை செங்குந்தர் பேரவையின் சார்பில் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டி.வி.கருணாகரன், பி.ராஜூ, எஸ்.விஜயகீர்த்தி, டி.எஸ்.பாலசுப்பிரமணி, ஜெ.ஆர்.கோபிநாத் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

திருவாலங்காடு
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை வடாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பங்குனி உத்திர திருவிழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 10 நாள் நடைபெறவுள்ள விழாவில், உற்சவர் சோமாஸ்கந்தர் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவ விழாவில் சிறப்பு பெற்ற கமலா தேரோட்டம் வரும் 7ம்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

 

The post திருமழிசையில் கோலாகலம்; ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்: வரும் 7ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article