திருமலையில் போலி வெப்சைட் முகவரியில் தங்கும் அறை தருவதாக பக்தர்களிடம் நூதன மோசடி: தேவஸ்தானம் எச்சரிக்கை

4 weeks ago 5

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.50 முதல் ரூ.7,000 வரையிலான கட்டணத்தில் 6000க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் தினசரி வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று திருமலை பாலாஜி நகர் அருகே பாஞ்சஜன்யம் என்ற ஓய்வறையும் உள்ளது. இந்த ஓய்வறையை தேவஸ்தானம் சார்பில் ரூ.1000 கட்டணத்திற்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாஞ்சஜன்யம் கெஸ்ட் ஹவுஸ் பெயரை பயன்படுத்தி இணையதளத்தில் போலி வெப்சைட் மூலம் அறைகள் பதிவு செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: பாஞ்சஜன்யம் என்ற பெயரில் போலி வெப்சைட் முகவரியில் இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 92535 60523 என்ற மொபைல் எண் வழங்கியுள்ளனர். அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டால் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசும்படி கூறுகிறார்கள். ஏழுமலையான் கோயிலுக்கு அருகாமையிலேயே இந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளதாகவும் ஏசி அறைகள் ரூ.1,650க்கும், ஏசி அல்லாத அறைகள் ரூ.1,250க்கும் வழங்கப்படுவதாக கூறி ஆன்லைனில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். பின்னர் பணம் செலுத்திய ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்தால் ரசீது அனுப்புவதாகவும் அதனை திருமலைக்கு வந்து காண்பித்து அறைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் நூதனமுறையில் சில கும்பல் ஏமாற்றி வருகிறது.

எனவே பக்தர்கள் யாரும் அந்த போலி வெப்சைட்டை அணுகாமல் திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்தை பொறுத்தவரை பாஞ்சஜன்யம் கெஸ்ட் ஹவுசில் ரூ.1000 வாடகையும், ரூ.1000 அட்வான்ஸ் தொகையும் பெறப்படுகிறது. இதில் சாவியை ஒப்படைக்கும்போது ரூ.1000 அட்வான்ஸ் பணத்தை திரும்ப தரப்படுகிறது. திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் உள்ளது. ஆனால் நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் அறை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். ஆனால் இதனை சாதகமாக்கி கொண்டு மோசடி கும்பல் பக்தர்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கிறது. எனவே பக்தர்கள் அந்த கும்பலிடம் சிக்காமல் தேவஸ்தான வெப்சைட்டை மட்டுமே அணுகவேண்டும். இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே அந்த வெப்சைட் குறித்து விஜிலென்ஸ் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலிடம் பக்தர்கள் யாரேனும் பணம் அனுப்பி ஏமாந்தார்களா? எனவும் விசாரிக்கின்றனர்.

The post திருமலையில் போலி வெப்சைட் முகவரியில் தங்கும் அறை தருவதாக பக்தர்களிடம் நூதன மோசடி: தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article