ஜிதேஷ் சர்மா சரவெடி பேட்டிங்: லக்னோவை வீழ்த்தி டாப் 2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு

1 day ago 4

லக்னோ,

18-வது ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணி தரப்பில் இந்த ஆட்டத்திலும் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதால் கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 118 ரன்களும், மிட்செல் மார்ஷ் 67 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் லக்னோ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவர்களில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த படிதார் 14 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் வில்லியம் ஒரூர்க் வீழ்த்தினார்.

பின்னர் மயங்க் அகர்வால் களமிறங்கினார். அவரும் வேகமாக மட்டையை சுழற்ற பெங்களூரு அணி வெற்றியை நோக்கி பயணித்தது. இதனிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த சிறிது நேரத்திலேயே விராட் (54 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா லக்னோ பந்துவீச்சை வெளுத்து வாங்க ரன்ரேட் ஜெட் வேகத்தில் வெளியேறியது. 49 ரன்களில் இருந்த சமயத்தில் திக்வேஷ் ரதி வீசிய ப்ரிஹீட் பந்தால் கேட்சில் இருந்த ஜிதேஷ் சர்மா வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

முடிவில் வெறும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பெங்களூரு 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜிதேஷ் சர்மா 85 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்த பெங்களூரு கம்பீரமாக பிளே ஆப் சுற்றில் விளையாட உள்ளது.

Read Entire Article