திருமணமான 7 மாதத்தில் பெண் போலீசின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

3 weeks ago 5

*சாவில் சந்தேகம் தாய் பரபரப்பு புகார்

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவி. இவரது மகன் விஜய்(29). இவருக்கும் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சுகன்யா(27) இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மணப்பெண் காவலராக செங்கம் காவல் நிலையத்தில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். பணியின் சிரமம் காரணமாக செங்கம் டவுன் திருவள்ளுவர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

கணவர் விஜய் பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் சுகன்யாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விஜய் தகராறில் ஈடுபட்டார். ஆனால் சுகன்யா இதை பொருட்படுத்தாமல் வேலைக்கு சென்றுவிட்டார்.

மேலும் மதியம் சாப்பிட்டுக்கு சுகன்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போதும் விஜய் நீ மாலையில் வேலைக்கு சென்றால் தற்கொலைசெய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகன்யா நான் வேலைக்கு போகவில்லை என கூறி, விஜய் நிலத்துக்கு சென்றதும் வேலைக்கு சென்றுவிட்டார்.

இரவு 11 மணியளவில் பணியை முடித்துவிட்டு சுகன்யா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சக காவலர்களை உதவிக்கு அழைத்து வீட்டின் கதவை திறந்துபார்த்தபோது விஜய் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மறுநாள் காலை விஜய்யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த விஜய்யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் செங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் விஜய்யின் தாயார் தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது மகன் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அதே நேரத்தில் தெரிவிக்காமல் சடலத்தை திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்ததில் சந்தேகம் வலுக்கிறது.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பரபரப்பாக புகார் அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் பிரேத பரிசோதனை அறிக்கையின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருமணமாகி 7 மாதத்துக்குள் பெண் போலீசின் கணவர் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருமணமான 7 மாதத்தில் பெண் போலீசின் கணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article