சென்னை: திருமண மண்டபங்களில் உறவினர்கள் போல் சென்று, மணமக்களுடன் புகைப்படம் எடுக்கும் போது மொய் பணம் மற்றும் நகைகளை திருடி வந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (60). இவரது மூத்த மகன் திருமணம் கடந்த ஜனவரி 26ம் தேதி மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள வன்னியர் தருமபரிபாலன சங்க திருமண மண்டபகத்தில் நடந்தது.
திருமணத்தின் போது உறவினர்கள் வைத்த மொய் பணம் ரூ.2 லட்சம் மற்றும் 3 சவரன் தங்க நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் அடங்கிய பையை, திருமண மண்டபத்தின் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு திருமண தம்பதியுடன் போட்டோ எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பணம் மற்றும் நகை வைத்திருந்த பை மாயமாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பழைய குற்றவாளியான விழுப்புரம் மாவட்டம் சண்முகாபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (53) என தெரியவந்தது. உடனே போலீசார் புருஷோத்தமனை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருமண மண்டபத்தில் உறவினர் போல் நடித்து மொய் பணம் மற்றும் தங்க நகையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த 3ம் ேததி சைதாப்பேட்டை பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் மொய் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.
மேலும், இவர் மீது இதுபோல் 5 வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் புருஷோத்தமனிடம் இருந்து மயிலாப்பூர் மண்டபத்தில் திருடிய ரூ.2 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள், சைதாப்பேட்டை மண்டபத்தில் திருடிய ரூ.57 ஆயிரம் என மொத்தம் ரூ.2.57 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருமண மண்டபங்களில் உறவினர்போல் சென்று புகைப்படம் எடுக்கும் நேரத்தில் மொய் பணம், நகைகள் திருட்டு: பிரபல கொள்ளையன் கைது, ரூ.2.57 லட்சம், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.