திருமங்கலம், பிப். 17: திருமங்கலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிக்கும் அடையாள எண் ஏற்படுத்துவதற்கான பதிவு முகாம் கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகிறது இதில் கலந்து கொண்டு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: திருமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கான அடையாள எண் வழங்குவதற்கான பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற உள்ளது.
கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் அல்லது விஏஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதிவு பணிகள் நடைபெற உள்ளது. வேளாண் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சிஆர்பி பணியில் உள்ளவர்கள் கிராம பகுதிகளுக்கு வந்து பதிவு பணிகளை மேற்கொள்வர்.
விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களுடைய விவபரங்களை கூறி அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம். இந்த அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆதார் எண் போலவே மிகவும் அவசியமானது.
எதிர்காலத்தில் இந்த எண் அடிப்படையில் மட்டுமே விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற இயலும். இதேபோல், விவசாய செலவினங்களுக்காக வங்கியில் கடன் பெறவும் பயன்படுத்த முடியும். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்று அடையாள எண்ணை பதிவு செய்வது அவசியம். இந்த பதிவுக்கான முகாமில் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, கணினி பட்டா மற்றும் சிட்டா, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றுடன் பங்கேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post திருமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கான எண் பதிவு முகாம் துவக்கம் appeared first on Dinakaran.