திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சொத்து மேம்பாட்டிற்கான ஆலோசனை சேவைகளுக்கான சிஎம்ஆர்எல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது!

3 months ago 17

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையம் அருகே வணிக மேம்பாட்டிற்கான ஆலோசனை சேவைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தனது நிலச் சொத்துக்களின் முழுமையான பயன்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மெட்ரோ இரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வழித்தடம் வழியாக 600 மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட ஒரு முக்கிய நிலப்பகுதி வணிக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இதற்கான ஆலோசனை சேவைகளுக்கு ஒப்பந்தங்கள் அழைக்கப்பட்டன.

பொது போட்டி ஒப்பந்த முறையைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இதற்கான ஒப்பந்தத்தை M/s Aarvee Associates Architects Engineers & Consultants Pvt Ltd மற்றும் M/s ANAROCK Property Consultants Pvt Ltd ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ. 27.61 லட்சம் (வரிகள் தவிர்த்து) மதிப்பில் வழங்கியுள்ளது. மேலும் இந்த பணிகள் 90 நாட்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்தல், செயல்பாடு ஆய்வுகள், சந்தை பகுப்பாய்வு, பரிவர்த்தனை ஆலோசனை மற்றும் வணிக மேம்பாட்டு திட்டமிடல் ஆகிய பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

ஒப்பந்த ஆவணங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பப்படும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி. அர்ச்சுனன் மற்றும் தலைமை பொது மேலாளர் திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆகியோர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s Aarvee Associates நிறுவனத்தின் சார்பாக துணைத் தலைவர் ஸ்ரீமதி. ஜே.கே. நந்தனா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், ANAROCK Property Consultants Pvt நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு.எஸ்.வினோத், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர் குழுக்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை அதிகரிப்பதற்காக, மெட்ரோ இரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தப்படாத இடங்களை நகரத்தின் முழுமையான நலனுக்காக வணிக மையங்களாக மாற்றுவதற்கான முக்கியமான படியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

 

The post திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சொத்து மேம்பாட்டிற்கான ஆலோசனை சேவைகளுக்கான சிஎம்ஆர்எல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது! appeared first on Dinakaran.

Read Entire Article