திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி விரிவாக்கம்: 1,000 வாகனங்களை நிறுத்தலாம்

5 hours ago 4


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்துமிடம் வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது. திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் துணை கட்டிடத்திற்கு அருகில் தற்போதுள்ள பி.2 வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் வாகன நிறுத்தும் இடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாகனம் நிறுத்துமிடத்தில் கூடுதலாக 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தற்போது, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி.2 வாகனம் நிறுத்துமிடம் 1,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்கி, மெட்ரோ சேவையை மேலும் எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்த ஊக்குவிக்கும்.

மேம்படுத்தப்பட்ட இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) பி.கோபிநாத் மல்லியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் (மின்சாரம் மற்றும் இயந்திரவியல்), எஸ்.கே.நடராஜன், கூடுதல் பொது மேலாளர் (மெட்ரோ ரயில் மற்றும் இயக்கம்) எஸ்.சதீஷ் பிரபு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். ரயில் சேவை நீட்டிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் 2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த முயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் சிஎஸ்கே போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும். கூடுதலாக, ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டி முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்படும். ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ ரயில் புறப்படும் நேரம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும். பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

The post திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் பகுதி விரிவாக்கம்: 1,000 வாகனங்களை நிறுத்தலாம் appeared first on Dinakaran.

Read Entire Article