ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ரூ.2 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

4 hours ago 3


ஊட்டி: ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ரூ.2 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. சுற்றுலா நகரமான ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் பூங்காக்கள் உள்ளன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகியன தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது தவிர ஊட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் ஏராளமான சிறிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்லவில்லை என்ற போதிலும், உள்ளூர் மக்கள் ஓய்வு எடுக்கடுவும் நடைபயணம் மேற்கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம் இந்த பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் செல்லும் வகையில் மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள நகராட்சி பூங்கா அறிவியல் பூங்காவாக மாற்ற ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்தவுடன், இங்கு பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புக்களை வைக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு கூறுகையில்,“தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிவியல் சார்ந்த பூங்காக்கள் உள்ளன.

ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற பூங்காக்கள் இல்லை. எனவே, ஊட்டி நகராட்சி சார்பில் மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பூங்கா, அறிவியல் பூங்காவாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பூங்காவில், பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புகள் இடம் பெறும். இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டு பயன் அடையலாம். அதேபோல், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் இதனை கண்டு மகிழலாம்’’ என்றார்.

The post ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ரூ.2 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article