திருப்போரூர்: திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், 7ம் ஆண்டு திருக்குறள் தினத்தையொட்டி மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. திருக்குறள் பேரவை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தனஞ்செழியன், துணைத்தலைவர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் குமார் வரவேற்றார். ஆலத்தூர் அபெக்ஸ் நிறுவன துணைப் பொது மேலாளர் காந்தி, தொழிலதிபர்கள் பன்னீர்செல்வம், வேல்மோகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா, திருவள்ளுவர் ஓவியம் வரைதல், மாறு வேடம், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட 8 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 19 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பின்னர், மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாரத வித்யாலயா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன், அறுபடை வீடு மெட்ரிக் பள்ளி முதல்வர் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார். முடிவில், திருக்குறள் பேரவை இணைச்செயலாளர் மேரி ஸ்டெல்லா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் பேரூராட்சி துணைத்தலைவர் பரசுராமன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
The post திருப்போரூரில் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி appeared first on Dinakaran.