திருப்பூர்: திருப்பூர் நகராட்சியானது 01.01.2008 முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, பின்னர் 2 மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் 8 கிராம ஊராட்சிகளை இணைத்து 25.10.2011 முதல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 159.35 ச.கி.மீட்டராகும். 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 8.77 இலட்சம் ஆகும். தற்போதைய மக்கள் தொகை 13.99 இலட்சமாகும். முதல் நிலை (A Grade) மாநகராட்சியாக உள்ள திருப்பூர் மாநகராட்சியானது 60 வார்டுகளை கொண்டுள்ளது.
தற்போது திருப்பூர் மாநகராட்சியுடன் இம்மாநகரையொட்டி அமைந்துள்ள கனியாம்பூண்டி மற்றும் நாச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகரித்து வரும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்யவும், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்தவும், போதிய வசதிகளுடன் திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவது அவசியமாக உள்ளது.
எனவே, திருப்பூர் மாநகரில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் வார்டு சி, பிளாக் எண். 31, நகரளவு எண். 2ல் உள்ள திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 3.32 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் இருக்கும் மருத்துவ துறை சார்ந்த பழைய கட்டிடங்களை அகற்றி, அவ்விடத்தில் ரூ.46.80 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணையின் பேரில் நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய அலுவலகக் கட்டடம், மொத்தம் 96432 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் அலுவலகப் பகுதி, உயர் அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்தூக்கிகள், சாய்வுதளங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக அமையவுள்ளது. பொதுமக்கள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டிடம் அமையும்.
The post திருப்பூர் மாநகராட்சியுடன், ஊராட்சிகளையும் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய உத்தேசம் appeared first on Dinakaran.