திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை இணைக்க ரூ.8.9 கோடியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம்

3 hours ago 1

*40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்

திருப்பூர் : திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.8.9 கோடியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளதால் விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் நொய்யல் ஆறு கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டம், ஈரோடு வழியாக கரூர் சென்றடைகிறது. அதன் பின்னர் அங்கிருந்து திருச்சி சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த நொய்யல் ஆற்றை நம்பி பல லட்சம் ஏக்கர் விவசாய பாசனம் நடைபெற்று வருகிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் நொய்யல் ஆறு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பல பகுதிகளில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதனை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், விளைச்சல் பொருட்களை கொண்டு செல்லவும், விவசாய பணிகள் செய்யவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் ஒட்டிய பகுதியான காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி மற்றும் ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்று பாசனத்தை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், விவசாய பணிகள் உள்ளிட்டவைகளுக்காக தினமும் ஏராளமானவர்கள் அந்த பகுதிக்கு சென்று வருகிறார்கள்.

இவ்வாறு செல்கிறவர்கள் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் பல பகுதிகளை சுற்றி திருப்பூர் மாவட்ட பகுதிக்கும், ஈரோடு மாவட்ட பகுதிக்கும் சென்று வருகிறார்கள்.

இதனால், இந்த 2 மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 40 ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த 2 மாவட்டங்களை இணைக்கும் வகையிலும் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக ஆணை வழங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

காங்கயம் பரஞ்சேர்வழி அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே குருக்கல்பாளையம் சாலையில் நொய்யல் பூச்சிக்காடு வலசு, தப்பியங்காடு ரோடு வரை பகுதியில் சுமார் 100 மீட்டரில் ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் வாயிலாக 80 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பாலம் அமைவதால் போக்குவரத்து 5 கிலோ மீட்டர் வரை அனைவருக்கும் குறையும். இதனால், விவசாயிகளுக்கு பல்வேறு செலவுகளும், நேரமும் மிச்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை இணைக்க ரூ.8.9 கோடியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் appeared first on Dinakaran.

Read Entire Article