
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், போலீஸ் காவலில் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் மேலும் இந்த வழக்கை மதுரை 4-வது கோர்ட்டின் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியின் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கியுள்ளார். திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். மடப்புரம் கோவில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அதைபோல திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள டிராவல்ஸ் பங்களா பயணியர் விடுதி அறையில் விசாரணை நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் டி.வி.ஆர். (DVR) பதிவுகள், பென் டிரைவ்கள் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகார், வழக்கின் சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர். ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தவும் நீதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.