திருப்புவனம்: நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருப்புவனத்தில் சுமார் 35 அடி நீளத்தில் ராட்சத அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் இயங்கி வருகின்றன. திருப்பாச்சேத்தி அரிவாளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இப்பகுதியிலுள்ள கருப்பண்ணசாமி, சோனைச்சாமி உள்ளிட்ட குலதெய்வ கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக அரிவாள் செலுத்துவது வழக்கம்.
பொருளாதார வசதியுள்ள பக்தர்கள் பெரிய அளவிலான அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்துவதுண்டு. இதுவரை 3 அடி முதல் 21 அடி வரை நீளம்கொண்ட பெரிய அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது திருப்புவனத்தில் முதல்முறையாக 35 அடி நீளமுள்ள நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து 5 நாட்களில் இந்த அரிவாளை தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து பட்டறை தொழிலாளி சந்திரசேகர் கூறுகையில், ‘பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிறிய, பெரிய அளவுகளில் அரிவாள் தயாரித்து கொடுத்து வருகிறோம். இதில் வேலைப்பளு அதிகம். சிங்கப்பூரில் வசிக்கும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொடுத்த ஆர்டரின்பேரில் ஒரு டன் எடைகொண்ட, 35 அடி நீளமுள்ள ராட்சத அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அரிவாளை லாரியில்தான் கொண்டு செல்ல முடியும். கோயிலில் கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. பெரிய அரிவாள் தயாரிக்க ஒரு அடிக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை செலவாகும்’ என்றார். ராட்சத அரிவாளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
The post திருப்புவனத்தில் 35 அடி உயர ராட்சத அரிவாள் தயாரிப்பு appeared first on Dinakaran.