பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற மகன்: தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம்

3 hours ago 4

தேன்கனிக்கோட்டை: பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மகனை போலீசா கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சி, ஜெயபுரம்புதூர் கிராமத்தில் வசிப்பவர் அய்யாதுரை, கூலி தொழிலாளி. இவருக்கு பூபதி (65) என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். மகன்கள் திருமணம் ஆகி தனி தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகன் பரமசிவனுக்கு (32) லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, பரமசிவனை பிரிந்த லட்சுமி, கடந்த 6 ஆண்டுகளாக குழந்தைகளுடன் பைரமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். பரமசிவன் தந்தை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பரமசிவன், என் வாழ்க்கை கெட்டு போனதற்கு நீ தான் காரணம் என கூறி தாய் பூபதியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த பரமசிவன், மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தாய் பூபதியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவரை சமாதானம் செய்வதற்காக, அய்யாதுரை கிராமத்தில் உள்ள பெரியவர்களை அழைத்து வர சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, பூபதி தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வந்து பூபதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், காட்டில் பதுங்கியிருந்த பரமசிவனை நேற்று காலை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, பணம் தர மறுத்ததால் தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்ததில், கீழே விழுந்து இறந்து விட்டார். இதனால் பயந்துபோய் தற்கொலை செய்து கொண்டது போல் தூக்கில் தொங்க விட்டதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, பரமசிவனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post பெற்ற தாயை காலால் நெஞ்சில் எட்டி உதைத்து கொன்ற மகன்: தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் appeared first on Dinakaran.

Read Entire Article