
நவதிருப்பதி கோவில்களில் 3வது திருப்பதியான திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி கடந்த 10-ந்தேதி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் இன்று அதிகாலை நிறைவடைந்த நிலையில், 5.00 மணி அளவில் பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் 5.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்களுடன் கோவிலை வலம் வந்தனர். பின்னர் விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் 6.10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.