மதுரை,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் என்று இந்து அமைப்பினர் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் திடீரென தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி அறிவித்த அறப்போராட்டத்தில் தென் மாவட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாத வகையில் அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
தடையை மீறி வாகனங்களில் வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கைதும் செய்யப்படுவர் என போலீசார் எச்சரித்துள்ளனர். மலையைச் சுற்றி, 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து எஸ்.பி.,க்கள், மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் சுற்று வட்டார பகுதியில் உணவகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5-6 மணிக்கு இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் மதம் மற்றும் தனி நபர்களை விமர்சித்தோ, பிரச்னை ஏற்படும் வகையிலோ ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும் அது அரசமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில் கோவிலுக்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம், "வெற்றிவேல் வீரவேல்" என முழக்கமிட்டு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.