திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும், 1931-ல் லண்டன் கவுன்சில் கூறிய தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி புனிதம் காக்க கோரி நேற்று திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே, அசாதாரண சூழ்நிலை நிலவியதால், 3 மற்றும் 4-ந்தேதி என ஆகிய 2 நாட்களிலும், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவினை கலெக்டர் சங்கீதா பிறப்பித்தார். இதுபோல், இந்து முன்னணியினர் நடத்தும் இந்த போராட்டத்திற்கு, மாநகர காவல்துறையும் அனுமதி மறுத்தது.
144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய நிலையில் 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா,ஜனதா, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன்ர்.