திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

1 week ago 3

சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பின் வட சென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை அதில் இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடியதை அடுத்து அந்த மலையை காக்க வேண்டி சென்னையில் வேல் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஏற்கனவே திருப்பரங்குன்றம் உரிமை குறித்து பியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அதன் பின்னர் அதுகுறித்து மீண்டும் பிரச்சனை எழுப்புவது சரி இல்லை என்று தெரிவித்தார். குறிப்பாக மனுதாரர் கேட்டுள்ள பாதை என்பது போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுன்றி வேறு எந்த இடத்திலும் பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் தேவையற்ற விரும்ப தகாத பிரச்சனையை உருவாக்கும்.

ஏற்கனவே மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதால் அங்கு பிரச்சனையை பெரிதாக்க நீதிமன்றம் ஊக்குவிக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு ? தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்க பார்க்கிறீர்கள் என கண்டனம் தெரிவித்தார். மேலும் பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்டநெரிசல் மிகுந்த இடம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஏற்கனவே மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனை மீறி பொது அமைதிக்கும்,

மத நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளனர் என்றும் அதற்காக தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து நெருக்கடி இல்லாத பாதையில் பேரணி நடத்தப்படும் என்றாலும் பேரணி நடத்த அனுமதிக்க கூடாது என தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாமல் இது போன்ற போராட்டங்களால் மதநல்லிணக்கம் பாதிக்கும். தமிழ்நாடு மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமைக்கும் என்றுமே பெயர் பெற்றது என்றும் மக்கள் மத வேறுபாடின்றி ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி அவர் வாதிட்டார். அணைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று அந்த பேரணிக்கு அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

The post திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்த அனுமதி அளிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article