திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள் கோடிபோனது

1 month ago 6

*விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள் நேற்று கோடிபோனது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 49 ஏரிகள் உள்ளன. இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் நீர்பிடிப்பு மற்றும் ஏரி பகுதிகள் உள்ளன.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பெரிய ஏரி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி ஆகும். தற்போது அந்த ஏரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 75 சதவீதம் நிரம்பி உள்ளது. மேலும், மாவட்டத்தில் அகிலேரி, பொம்மிகுப்பம் ஏரி, பசலிக்குட்டை ஏரி, சிம்மனபுதூர்ஏரி, பெருமாப்பட்டு ஏரி, மாடப்பள்ளி ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இவற்றில் திருப்பத்தூர் பெரிய ஏரி மற்றும் சிம்மனபுதூர் ஏரி ஆகிய 2 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

இதில், குனிச்சி, தாமலேரிமுத்தூர் உட்பட 3 ஏரிகள் 75 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது,மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்து கால்வாய்களை மழைக்கு முன்பு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதால், தற்போது அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரம்பி வந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும் நிரம்பி வருகிறது.

ஆண்டியப்பனூர் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 5க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடக்கும். மேலும், நெல், வாழை, கரும்பு பயிர்களை பயிரிடவும், ஏரியில் நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால், அருகே உள்ள விவசாய நிலங்கள் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடிநீர் உயர்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:மழைக்காலத்திற்கு முன்பாகவே ஏரியை ஆழப்படுத்துதல், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரி சுற்று பகுதிகளை சமன் செய்தல், மதகுகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று உள்ளது. இதனால் ஏரி உடைப்பு எதுவும் ஏற்படாத வகையில், பொதுப்பணித்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆண்டியப்பனூர் அணையில் நீர்வரத்து அதிக அளவில் வரும் காரணத்தினால் கரையோர மக்களுக்கு மட்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கரையோரம் இருந்தால் வீடுகளை காலி செய்து, ஊருக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். தொடர்ந்து வானிலை மையம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

ஆகையால் பொதுமக்கள் மழை பெய்யும் போது நிலத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் ஏதாவது அறுந்து விழுந்தாலும் உடனடியாக மின்சார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள் கோடிபோனது appeared first on Dinakaran.

Read Entire Article