
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் ஊத்தங்கரையை சேர்ந்த பிரபு என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், 7-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு பிரபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிகள், நேற்று குழந்தைகள் உதவி மற்றும் புகார் எண்ணுக்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குழுவினர் சம்பவம் நடந்த அரசுப்பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவிகளுக்கு ஆசிரியர் பிரபு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பிரபு மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.