ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பயங்கர அதிர்வுடன் சத்தம் கேட்டதால் வீடு, கடைகளில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்தனர். நில அதிர்வா? அல்லது எரிகல் ஏதேனும் விழுந்ததா? என மக்கள் சந்தேகம் அடைந்தனர். அதேநேரத்தில் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் வானில் வெள்ளை நிற புகை படிவம் தென்பட்டது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினர் வந்து கொரட்டி பகுதி அருகே உள்ள மைக்காமேடு, செல்லரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
‘’திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகள் முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வரையிலான பகுதி வரை மாலை 5 மணி அளவில் ஒரே நேரத்தில் அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சில இடங்களில் அதிர்வும் கொரட்டி பகுதியில் வானில் வெள்ளை நிற புகை படிவம் தெரிந்ததாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இருப்பினும் வானில் இருந்து எந்தவித பொருளும் பூமியில் விழுந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து கிராம மக்களிடம் விசாரித்து வருகிறோம். எனவே கிராம மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சத்தம் கேட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு 3 முறை எரிகல் விழுந்துள்ளது.
The post திருப்பத்தூரில் நில அதிர்வு?: அதிர்ச்சியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.