திருப்பதியில் ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி விழா- விரிவான ஏற்பாடுகள்

1 month ago 6

திருப்பதி திருமலையில் உள்ள ஏழு தீர்த்தங்களில் ராமகிருஷ்ண தீர்த்தமும் ஒன்று. திருமலை ஏழுமலையான் கோவிலில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமி தினத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் ஏழுமலையான் கோவிலில் இருந்து பூஜைக்கு தேவையான மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்யங்களை கோவில் பூசாரிகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ராமகிருஷ்ண தீர்த்தத்திற்கு கொண்டு சென்று, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். நைவேத்யங்களை சமர்ப்பித்து வழிபடுவார்கள். ஏராளமான பக்தர்கள் மலையேறிச் சென்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடி வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஸ்ரீ ராமகிருஷ்ண முக்கொடி விழா வரும் 12-ம் தேதி (12-2-2025) நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதிக்கு செல்வதற்காக மலையேறும் பக்தர்களுக்கு தேவையான கயிறுகள், ஏணிகள், மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ்கள், அன்னபிரசாதம் பாக்கெட்டுகள் விநியோகம், தண்ணீர் வசதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கோகர்பம் அணையில் இருந்து பாபவினாசனம் அணைக்கு பக்தர்களை ஏற்றிச் செல்ல அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பாபவினாசனத்தில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார். பக்தர்கள் எளிதில் அறிந்துகொள்வதற்காக ஜிஎன்சி, பஸ் நிலையம், ஆக்டோபஸ் சர்க்கிள், பாபவினாசம் அணை ஆகிய இடங்களில் யாத்ரீக பாதை வரைபடத்துடன் கூடிய போர்டுகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வேங்கட மலையில் தவம் செய்த மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தனக்காக இந்த தீர்த்தத்தை உருவாக்கியதாக ஸ்கந்த புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்த கரையில் வாழ்ந்த அவர் இங்கு புனித நீராடி, கடுமையான தவம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article