திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய நித்திய சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் உள்ளிட்ட தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் 90 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அவ்வாறு ஜனவரி மாதத்திற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து வரக்கூடிய பக்தர்கள் ரயில் பயணத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அதனால் ரயில் டிக்கெட் 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்படுவதால் அதற்கு ஏற்ப தரிசன டிக்கெட் பெறுவதற்கு சுலபமாக இருக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 90 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய 90 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்தது. இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறையை 60 நாட்களாக குறைக்க தேவஸ்தான தகவல் தொடர்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு? appeared first on Dinakaran.