திருப்பதி லட்டு விவகாரம்: புதிய விசாரணை குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

3 months ago 24

புதுடெல்லி,

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக சர்ச்சை வெடித்தது. லட்டுவில் கலக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம் புகாரளித்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், கலப்படமானதாக இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார். மீன் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்டவை கலக்கப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருப்பதி கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது.

கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெகன் மோகன் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, "அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இதனை கோர்ட்டு எதிர்பார்க்கிறது. ஆந்திர அரசு, சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. முடிவு வரும் வரை காத்திருக்காமல் பத்திரிகைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?"என சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது , திருப்பதி லட்டு விவகாரத்தில் மாற்றி அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், இந்தக் குழுவில், "சிபிஐ இயக்குநர் நியமிக்கும் அதிகாரிகள் 2 பேர் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெறுவர்; உணவுபாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க வேண்டும்; ஆந்திர மாநில காவல் அதிகாரிகள் 2 பேரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது

Read Entire Article