திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் மீதான நெய் கலப்பட குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி?

3 months ago 22

* குஜராத், சென்னை ஆய்வக அறிக்கைகளில் முரண்பாடு, ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

மதுரை: திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி? என்று ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ஜி.கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்வது தொடர்பான டெண்டர் அறிவிப்பை கடந்த மே மாதம் திருமலை தேவஸ்தானம் வெளியிட்டது. இதில், நெய் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தேவஸ்தானத்தில் இருந்து 1,500 கிமீ தொலைவிற்குள் இருக்க வேண்டுமென கூறியிருந்தனர். இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால், மே 28ல் எங்களது நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. ஜூன் 6 – அக். 30 காலகட்டத்தில் 10 லட்சம் கிலோ நெய் சப்ளை செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டோம்.

எங்களைப் போல மேலும் 4 நிறுவனங்களுக்கு நெய் சப்ளை செய்வதற்கான டெண்டர் ஒதுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் மட்டுமே நெய் சப்ளை செய்வதற்கான டெண்டரை பெற்றோம். ஜூன் 4 முதல் டேங்கர் லாரி மூலம் நெய் சப்ளை செய்தோம். ஜூன் 4, ஜூன் 11, ஜூன் 19 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் ஆய்வக பரிசோதனை ஒப்புதலுக்கு பிறகு நெய் சப்ளை செய்தோம். இதற்குரிய பணம் 3 தவணைகளில் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூலை 3, 4 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 4 லோடுகள் கூடுதலாக அனுப்பினோம். ஜூலை 25ல் எங்கள் ஒப்பந்தத்தை நிராகரித்து இமெயில் அனுப்பினர்.

இதன்பிறகு திடீரென ஜூலை மாதத்தில், ‘‘ஏன் உங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கூடாது? உங்களது நிறுவனத்தை கருப்பு பட்டியலில் ஏன் வைக்கக் கூடாது’’ என விளக்கம் கேட்டு 3 நோட்டீஸ்கள் கொடுத்தனர். இதற்கு நாங்கள் உரிய விளக்கம் கொடுத்தோம். ஆனால், குஜராத் ஆய்வகத்தின் அறிக்கை முடிவின்படி, உணவு பாதுகாப்பு சட்டப்படி தரமானதாக இல்லை என கூறினர். குஜராத் தனியார் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எங்களது தயாரிப்பில் எந்த தவறும் இல்லை.

ஆனால், எங்களது தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. இதனடிப்படையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு துறையின் கீழான ஒன்றிய தரக்கட்டுப்பாடு ஆணைய லைசென்ஸ் அனுமதி பிரிவினர் எங்களது உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விளக்கமளிக்க எங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கவில்லை. என்ன விதிமீறல் என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இது ஏற்புடையதல்ல. எனவே, அந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘செப். 29ல் அனுப்பப்பட்ட நோட்டீசில் அக். 2ல் நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். தேவஸ்தான ஆய்வறிக்கையில் விலங்கு கொழுப்பு கலப்படம் என எங்கும் குறிப்பிடவில்லை. குஜராத் நிறுவன ஆய்வறிக்கையில் முரண்பாடு உள்ளது. சென்னை கிங்ஸ் நிறுவன சோதனையில் எந்தவித கலப்படமும் இல்லை என கூறப்பட்டுள்ளது’’ என வாதிடப்பட்டது.

ஒன்றிய அரசு தரப்பில், ‘‘மனுதாரர் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது தயாரிப்பான நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான கால அவகாசம் வழங்க தயாராக உள்ளோம்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் நிறுவனத்திற்கு எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த வகை விதிமீறலுக்காக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

2 நோட்டீஸ்களிலும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவின்றி உள்ளது. செப். 29ல் நோட்டீஸ் கொடுத்து, அக். 2ல் காந்தி ஜெயந்தி விடுமுறையில் விளக்கம் கோரினால் எப்படி? நோட்டீஸ்களில் எந்தவிதமான தகவல்களும், விபரங்களும் இல்லை. உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் கொடுத்துள்ளது? நோட்டீஸ் கொடுத்தால், பதிலளிக்க உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். சென்னை ஆய்வக அறிக்கைக்கும், குஜராத் அறிக்கைக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

சென்னை நிறுவனம் கலப்படம் இல்லை என கூறியுள்ளது. இதுவும் அரசு நிறுவனம் தான். ஒன்றிய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் எங்கே? இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போது இது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும். ஏற்கனவே அனுப்பிய ஒன்றிய அரசின் நோட்டீஸ்களை தவிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புதிதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதற்கு 14 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும். அந்த உரிய கால அவகாசத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம்’’ என உத்தரவிட்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.

* 2 நோட்டீஸ்களிலும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவின்றி உள்ளது. செப். 29ல் நோட்டீஸ் கொடுத்து, அக். 2ல் காந்தி ஜெயந்தி விடுமுறையில் விளக்கம் கோரினால் எப்படி?

* சென்னை ஆய்வக அறிக்கைக்கும், குஜராத் அறிக்கைக்கும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. சென்னை நிறுவனம் கலப்படம் இல்லை என கூறியுள்ளது. இதுவும் அரசு நிறுவனம் தான்.

* ஒன்றிய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் எங்கே? இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை.

The post திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்தின் மீதான நெய் கலப்பட குற்றச்சாட்டை உறுதி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியது எப்படி? appeared first on Dinakaran.

Read Entire Article