திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்கின்றனர். இந்த நடைபாதையில் அடிக்கடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. சிறுத்தைகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க தேவஸ்தான நிர்வாகம், வனத்துறை, காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து செல்லவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் அலிபிரி பாதையில் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அலிபிரி நடைபாதையின் 7வது திருப்பத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோயில் சன்னதி அருகே நேற்றுமுன்தினம் இரவு ஒரு சிறுத்தை நடமாடியுள்ளது.
இதனைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து பயந்து ஓடினர். அதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து சிறுத்தை தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து கூட்டமாக செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து நேற்று காலை முதல் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post திருப்பதி மலைப்பாதையில் இரவில் பரபரப்பு சிறுத்தை நடமாடியதால் அலறி அடித்து ஓடிய பக்தர்கள்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.