திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வதுநாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'பத்ரி நாராயணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்ள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. இதில் மலையப்பசுவாமி கல்கி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட வீதிகளில் நடைபெற்ற வாகன சேவையில் பல்வேறு கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. வாகன சேவையில் திரளான பக்தர்கள் பஜனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் பல்லக்கு உற்சவம் மற்றும் தங்கத்திருச்சி வாகன வீதிஉலா, காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.