திருப்பதி பிரம்மோற்சவ விழா: இன்று கருடசேவை - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

2 hours ago 3

கருடசேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை கருட வாகன வீதிஉலா (கருட சேவை) நடக்கிறது. கருட சேவை முன்னேற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருடசேவையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கேலரிகளில் அமர்ந்து வாகன வீதிஉலா வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வார்கள். கருடசேவையை பக்தர்கள் தரிசிக்க திருமலையில் உள்ள உள்வட்ட சாலை, வெளிவட்ட சாலையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சுபதம், தென் மேற்கு மூலை, கோவிந்த நிலையம் வடமேற்கு வாசல், வடகிழக்கு வாசல் வழியாக கேலரிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தா்களின் வசதிக்காக அனைத்து இடங்களிலும் தகவல் பலகைகள் அமைக்கப்படும். பக்தர்கள் தங்களுடைய உடை, உடைமைகளை கேலரிகளுக்குள் எடுத்துச் செல்லாமல், அந்தந்த வாசல் வாழியாக கேலரிகளில் நுழையலாம். பக்தர்களின் பாதுகாப்பு, வசதியைக் கருத்தில் கொண்டு திருப்பதி மலைப்பாதைகளில் (7-ந்தேதி இரவு 9 மணியில் இருந்து 9-ந்தேதி காலை 6 மணி வரை) இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, பொதுப் போக்குவரத்தைப் பக்தர்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசு பஸ்களை சுமார் 3 ஆயிரம் தடவை இயக்குவதன் மூலம் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பயணம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கருடசேவையைக் காண நான்கு மாடவீதிகளில் 28 பிரமாண்டமான ஒளித்திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் அருங்காட்சியகம், வராக சாமி தங்கும் விடுதி, அன்னதானக்கூட வளாகம், ராம்பகீச்சா தங்கும் விடுதி, பில்டர் ஹவுஸ் ஆகிய இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருடசேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Read Entire Article