திருப்பதி கோயில் பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்று ரூ.10.33 கோடி துணிகர மோசடி

4 months ago 16

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்கு ரூ.10.33 கோடிக்கு போலி தரிசன டிக்கெட்டுகள் விற்று மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரசாத்(29), பிடெக் பட்டதாரி. கடந்த 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஐதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றினார். அப்போது குடும்ப தகராறு காரணமாக வேலையைவிட்டு, வீட்டிலிருந்து வெளியேறி 2016ம் ஆண்டு திருமலைக்கு வந்தார். அங்கு கோயில் லட்டுகளை வாங்கி பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய தொடங்கினார்.

மேலும் அந்த பக்தர்களிடம் போன் நம்பர் பெற்று தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம், வி.ஐ.பி. தரிசன டிக்கெட் தருவதாக கூறி அவர்களிடமிருந்து அதிக தொகையை பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட்டுகளை அனுப்பி மோசடியில் ஈடுபட தொடங்கினார். இதில் பாதிக்கப்பட்ட பக்தர்கள் அளித்த புகார்களின்பேரில் திருமலை முதலாவது நகர போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.25,000, ஒரு பைக், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: போலி தரிசன டிக்கெட் விற்று கைதான பிரசாத், திருமலை ஜே.இ.ஓ. அலுவலக ஊழியர் எனக்கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க எப்போதும் வாட்ஸ்அப் அழைப்புகளை மட்டுமே பயன்படுத்தி மோசடி செய்து வந்துள்ளார். இதற்காக தனது சொந்த பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் பல வங்கி கணக்குகளை தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அதன்படி 9 வங்கி கணக்குகளில் ரூ.10.33 கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணத்தையெல்லாம் ஆடம்பர விருந்துகள் மற்றும் சூதாட்டத்திற்காக செலவிட்டும், குதிரைப்பந்தயம் மற்றும் கேசினோ சூதாட்டத்திற்கு சென்று செலவு செய்து வந்ததும் ெதரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே 2019ம் ஆண்டு குற்ற வழக்குகளில் கைதாகி, சிறை சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர் மீண்டும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

The post திருப்பதி கோயில் பக்தர்களிடம் போலி தரிசன டிக்கெட் விற்று ரூ.10.33 கோடி துணிகர மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article