
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று சக்கர ஸ்நானம் சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்திகளான கோதண்ட ராமர், சீதா தேவி, லட்சுமணர் பல்லக்கில் கபிலேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அங்குள்ள வேணுகோபாலசுவாமி கோவில் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், சீதா ராம லட்சுமணருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் கபிலதீர்த்தத்தில் உள்ள புஷ்கரணியில் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்களும் புனித நீராடினர். இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான துணை செயல் அதிகாரி நாகரத்னா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு கோவிந்தராஜசுவாமி மேல்நிலைப்பள்ளியின் பி.ஆர்.கார்டனுக்கு உற்சவர்கள் புறப்பட்டுச் சென்றனர். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தீர்த்தகட்ட வீதி, கொட்டகொம்மாள வீதி, கொட்டவீதி வழியாக கோதண்டராமாலயத்தை சென்றடைவார்கள். இடையில் ஆஞ்சநேயர் கோவிலிலும், வைகானசாச்சாரியார் கோவிலிலும் ஆஸ்தானம் நடைபெறும்.
இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெறும்.