திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்தோற்சவம் தொடக்கம்

1 week ago 6

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்தோற்சவ மண்டபத்தில் நேற்று வருடாந்திர வசந்தோற்சவம் பிரமாண்டமாகத் தொடங்கியது. கோடையின் வெப்பத்தை தணிக்க உற்சவர் மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் இந்த உற்சவம், 'உபசமானோற்சவம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த உற்சவத்தில் மணம் மிக்க மலர்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்கள் மலையப்பசாமிக்கு சமர்ப்பித்து படையலிடப்படுகின்றன. வசந்தோற்சவம் நடக்கும் மண்டபம் ஒரு வனப்பகுதியை உருவாக்கியதுபோல் அழகாக, பிரமாண்டமாக வடிவமைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வசந்தோற்சவம் தொடக்க நாளின் ஒரு பகுதியாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் இருந்து வசந்தோற்சவ மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலைகளால் அலங்காரம்

அப்போது தலில், விஸ்வக்சேனா ஆராதனை, புண்யாவச்சனை, நவ கலசாபிஷேகம், ராஜோபச்சாரம் ஆகியவை நடந்தன. அதன்பிறகு சத்ர, சாமர வியாஜன தர்பணாதி, முகப் பிரக்ஷலனா, தூப பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அபிஷேகத்தின்போது தைத்தரிய உபநிடதம், புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலாசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள், திவ்ய பிரபந்தத்தின் இணைப்புச் சுலோகங்களை வேதப் பண்டிதர்கள் ஓதினார்கள்.

ஒவ்வொரு அபிஷேகத்தின்போது உற்சவர்களுக்கு பல்வேறு வகையான மலர் மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டன. தீப, தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை அதிகாரி லோகநாதன், பேஷ்கார் ராம கிருஷ்ணா மற்றும் பிறதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தங்கத்தேரோட்டம்

வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

பின்னர் உற்சவர்களை தங்கத்தேரில் இருந்து கீழே இறக்கி அர்ச்சகர்கள் வசந்தோற்சவ மண்டபத்துக்குக் கொண்டு சென்று வசந்தோற்சவத்தை நடத்துகிறார்கள்.

 

Read Entire Article